articles

img

பெரு வெள்ளம் தந்த பெரும் துயரம் - கே.ஜி.பாஸ்கரன்

சிரபுஞ்சியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவு சராசரியாக 115 செண்டி மீட்டர் தான். ஆனால் டிசம்பர் 17, 18 ஆகிய இரு தினங்களில் தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையின் அளவு 116 செண்டி மீட்டர். டிசம்பர் 17 அதிகாலை 3 மணிக்கு துவங்கிய மழை டிசம்பர் 18 மாலை வரை நீடித்தது. பாபநாசம் அணையில் இருந்து தண்ணீரை திறக்கும் முன்பே, அதாவது டிசம்பர் 17 பிற்பகலே நெல்லையின் பல தெருக்க ளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. ஆபத்தான பெரு மழை என்பதை அப்போது தான் நெல்லை மக்களே உணர ஆரம்பித்தனர். 

ஓராண்டு மழை ஒரே நாளில்
பாபநாசம், மணிமுத்தாறு, கடனா அணைகளில் இருந்து சுமார் 60,000 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து  விடப்பட்டது. குளம், கண்மாய், மழை நீர் என அனைத்தும் சேர்த்து லட்சம் கன அடியைத் தாண்டி தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 95 செண்டி மீட்டர் மழை பெய்த காயல்பட்டினம் பகுதிக்கு தாமிரபரணி செல்லும் போது, ஆற்றின் நீரளவு 2 லட்சம் கன அடியை தொட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

40,000 கன அடியை மட்டுமே கொள்ளளவாகக் கொண்ட தாமிரபரணியில் மூன்று முதல் நான்கு மடங்கு அதிக தண்ணீர் சென்றது. அதன் வேகமும் பல மடங்கு அதிகரித்தது. நெல்லையை கடந்த பின், அதன் வேகமும் பரப்பும் எல்லை தாண்டிச் சென்றது. பாபநாசம் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிக ளில் 55 செண்டி மீட்டர் மழை கொட்டியது. நெல்லை மாவட்ட சராசரி மழை அளவே 68 செண்டி மீட்டர் தான். ஓராண்டு மழையை விட ஒரே நாளில் அதிக மழை கொட்டித் தீர்த்தது. 

1992 வெள்ளத்தின் போது கனமழை இல்லை...
கடல் மட்டத்தை விட சுமார் 1500 மீட்டர் உயரம் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து, 73 மீட்டர் உயரம் கொண்ட நெல்லைக்கும், 17 மீட்டர் உயரம் கொண்ட திருவைகுண்டத்திற்கும், பத்து மீட்டர் உயரம் கொண்ட திருச்செந்தூர் பகுதிக்கும் வெறி கொண்ட சிறுத்தையைப் போல தாவிக் குதித்து பாய்ந்தோடியது பெரு வெள்ளம். 1992இல் இது போல ஒரு வெள்ளம் வந்தது. அப்போது இது  போல மழை இல்லை. அணை நிரம்பியதை அடுத்து  சுமார் 1,30,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இப்போது திறந்ததை விட நான்கு மடங்கு அதிகம். பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், நெல்லை பகுதிகள் பாதிக்கப்பட்டன. அது முன் அறிவிப்பின்றி திறக்கப் பட்டது. அப்போது காட்டாற்று வெள்ளமும் இல்லை. 

ஆனால் இப்போது நெல்லை சந்திப்பில் 92ஐ விட வெள்ளம் ஐந்தடி அதிக உயரத்தில் சென்றது. பல கட்டிடங்களில் 92இல் வரைந்த கோடுகளுக்கு பக்கத்தில், உயரத்தில் இந்த வெள்ள அடையாள கோடுகள் ஒரு சித்திரத்தைப் போல வரையப்பட்டு உள்ளது. 1923 வெள்ளம் குறித்த ஆங்கில இந்து பத்திரிகையில் கூட, அப்போது நெல்லை சந்திப்பில் 3 முதல் 5 அடி உயரத்தில் தண்ணீர் சென்றதாகத் தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இப்போது பத்து அடிக்கும் குறைவில்லாமல் தண்ணீர் சென்றது. சுலோச்சன முதலியார் பாலத்தின் கீழே வழக்கமாக ஓடும் தாமிர பரணி சற்றே உயர்ந்து, ஐம்பதடி உயரத்தை தொட்டுச் சென்றது. 

சிறு ஓடை பெரிய கால்வாயானது
டிசம்பர் 18 காலையில் தன் அக்காவை பஸ் நிலை யத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிய பதினெட்டு வயது இளைஞன், என்ஜிஓ காலனி முக்கில் இரு சக்கர வாகனத்தோடு சரிந்து ஓடையில் விழுந்தான். அந்த சிறு ஓடையில் அப்போது பெரிய கால்வாயைப் போல தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்தது. இரு சக்கர வாகனம் ஓடையை அடைத்துக் கொண்டு கிடந்தது. அந்த இளைஞன் இரண்டு நாட்களுக்கு பிறகு நூறு அடி தள்ளி வேறொரு இடத்தில் கண்டெ டுக்கப்பட்டான். நெல்லை மாவட்டத்தில் மட்டும் இது வரை 16 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்திருக்கி றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழப்பு நூறைத் தாண்டும் என அச்சமூட்டும் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

ஜலசமாதியான குதிரைகள்
சிந்துபூந்துறையில் இரண்டு குதிரைகளை கட்டிப் போட்டு விட்டு உரிமையாளர் வீட்டுக்கு போய் விட்டார். கட்டிய இடத்திற்கு தென்புறத்தில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த தண்ணீர் இரண்டு குதிரைகளை யும் ஜலசமாதியாக்கியது. நெல்லை மாவட்டத்தில் 700க்கும் அதிகமான மாடுகளும், ஆடுகளும் வெள் ளத்தில் உயிர் இழந்தன. 30,000 கோழிகள் இறந்து போயிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. பல நூறு வீடுகள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. 

கருப்பந்துறையில் நிவாரணப் பணிக்கு சென்ற போது நான்கு வீடுகள் இடிந்து விழுந்து, அந்த வீட்டில் இருந்தவர்கள் பக்கத்தில் இருந்த தேவால யத்தில் தஞ்சம் அடைந்திருப்பதை காண முடிந்தது. அவர்கள் வாடகை வீட்டில் குடி இருந்தவர்கள். வீட்டுக் கான குறைந்தபட்ச இழப்பீடு கூட அவர்களுக்கு கிடையாது. 

பெரு வெள்ளத்தில் பெரும் சோகம் என்னவெ னில், தன் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்து இருந்த வீட்டுப் பொருட்களை வெள்ளத்தில் காவு கொடுத்தது தான். முட்டிக் கொண்டு வரும் கண்ணீ ரோடு அம்மக்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கி றார்கள். எல்லா சாலைகளிலும் தண்ணீரில் பொ தும்பிப் போன பொருட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு நாலைந்து வாகனங்களாவது செல்வதை தவறாமல் காண முடிந்தது. 

நல்லா இருக்கிற பொருளை எடுத்திட்டுப் போங்க...
தாமிரபரணி ஐந்து மாவட்ட மக்களின், சுமார் 70 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது. பல நூறு நீரேற்று நிலையங்கள், பகாசுர தண்ணீர் குழாய்கள் எல்லாம் அரக்கனொருவன் காலால் மிதித்து துவம்சம் செய்ததைப் போல உடைந்து சிதைந்து கிடக்கிறது. சிறு, குறு வியாபாரிகள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள். ஏரல் வியாபாரிகள், கடைக்குள் இருந்த பொருட்கள் அனைத்தையும் தெருவில் போட்டு, நல்லா இருக்கி றத யாரு வேணாலும் எடுத்துட்டுப் போங்க என சரக்கு களை கடைக்கு முன்னே குவித்துப் போட்டனர். மின் அணுச் சாதனங்கள் அனைத்தும் நாசமாகி விட்டன. 30 லட்சம் இழந்து விட்டதாக ஒரு பர்னிச்சர் கடை உரிமையாளர் மனம் உடைந்து பேசினார். 

ஏற்றத்தாழ்வைப் பறைசாற்றும் பெரு வெள்ளம்
ஆறு மற்றும் குளங்களுக்கு அருகில் இருந்த வயல்வெளிகள் ஆற்று மணலால் மூடிக் கிடக்கின்றன. ஓரடிக்கு மேலாக ஆற்று மணல் மேவிக் கிடக்கிறது வயல்வெளியை. மின் கம்பங்கள் உடனடியாக சீர் செய்யப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீத பகுதிகளுக்கு மின் விநியோகம் சீராகி விட்டது. சாலைகள், பாலங்கள் பலவும் சேதமடைந்துள்ளன. அனைத்தும் சீர் செய்யப்பட வேண்டும். 

இப்போதும் சொல்ல முடியும். எந்தப் பேரிடரும் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒளிவு மறைவின்றி பறைசாற்றுகின்றன. இந்த பெரு வெள்ள மும் ஏழை, எளிய மனிதர்களையே அதிகம் வஞ்சித்தது. உணவுக்கும் காத்திருக்க வைத்தது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என திகைக்க வைத்தது. அந்த வெள்ள நீரில் பல லட்சம் ஏழைக ளின் கண்ணீரும் சேர்ந்தே கடலுக்குச் சென்றது. 

கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)